சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்ததையடுத்து,இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி(pm modi) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து சந்திரயான்-3, விண்ணில் ஏவப்பட்டது.40 நாள் பயணத்திற்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோவில் சந்திரயான்-3 திட்ட பணிகளை இணையவழியில் பங்கேற்று பார்வையிட்டார்.
இதனையடுத்து மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி, காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா சரித்திரம் படைத்து இருப்பதாகவும்; புதிய இந்தியா உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்திய விண்வெளித்துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என தெரிவித்த பிரதமர் மோடி, இஸ்ரோவுக்கும், சந்திரயான்-3 திட்ட பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.