பழனி முருகன் கோவில், கடந்த 29-ந்தேதி தைப்பூச திருவிழா (thaipusa festival) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இதனையடுத்து, தைப்பூச திருவிழாவின் (thaipusa festival) முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.
தொடர்ந்து, சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று நடைபெறுவதையொட்டி, இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். மேலும், திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என அனைத்து சாலைகளிலும் பாதயாத்திரை பக்தர்கள் அணி, அணியாக நடந்து வந்தனர்.
மேலும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். குறிப்பாக, ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்ததால் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் பேருந்துகள், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
எனவே, அனைத்து வாகனங்களும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பைபாஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது. மேலும், பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்கவும் ஆங்காங்கே காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு சாலை நெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல், அன்னதான கூடங்களில் உணவு, குடிநீர், ஐஸ்கிரீம், இளநீர் என வெயிலுக்கு ஏற்ற பானங்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று பகல் முழுவதும் சாரல் மழை பெய்த நிலையில், வெயிலின் தாக்கம் தெரியாமல் அதில் நனைந்தபடி பக்தர்கள் நடந்து வந்தனர்.