“சென்னை மாநகராட்சி பகுதிகளில் 192 மோசமான சாலைகளும் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னை புறநகர் பகுதிகளில் 132 மோசமான சாலைகளும் உள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மக்கள் தணிக்கை மூலம் கண்டறியப்பட்ட மோசமான சாலைகள் குறித்து அறப்போர் இயக்கத்தினரின் ஆய்வறிக்கை குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர் சந்தித்த அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்…
அறப்போர் இயக்கம் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி மோசமான சாலைகளை படம் எடுத்து பதிவிட ஒரு கூகுள் பார்ம் இணையதள லிங்கை பொதுமக்களிடம் கொடுத்து இருந்தோம். அதில் 212 ஆர்வலர்கள் அவரவர் பகுதியில் உள்ள மோசமான சாலைகளை கண்டறிந்து புகைப்படம் எடுத்து இந்த லிங்கில் 324 மோசமான சாலைகளை பதிவு செய்திருந்தனர்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 192 மோசமான சாலைகளும் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னை புறநகர் பகுதிகளில் 132 மோசமான சாலைகளும் பதிவாகியுள்ளதாகவும் சென்னையில் ராயபுரம் அம்பத்தூர் கோடம்பாக்கம் வளசரவாக்கம் பெருங்குடி மற்றும் சோழங்கி நல்லூர் மண்டலங்களில் மோசமான சாலைகள் அதிக அளவில் உள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் எந்த ஒரு திட்டமிடுதல் இல்லாமல் அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் லட்சக்கணக்கான வீடுகளுக்கு அனுமதி தரும் சி எம் டி ஏ தான் சென்னை புறநகர் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. புதிதாக வளர்ச்சி அடையும் பகுதிகளில் கூட சிஎம்டிஏ எந்தவித திட்டமிடல் செய்யாமல் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தாமல் உள்ளது. ஆயிரக்கணக்கான அப்பார்ட்மெண்டுகளுக்கு ஒப்புதல் மற்றும் வழங்கிவிட்டு அதற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் சென்னை புறநகர் பகுதிகளை சிஎம்டிஏ சீரழித்து வருகிறது என குற்றம் சாட்டினர்.
சிஎம்டிஏ புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகளை உண்டாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரசின் பல்வேறு துறைகளான உள்ளாட்சி அமைப்புகள் மின்சார வாரியம் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் சிஎம்டிஏ போன்ற துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகப்படுத்துதல் மிகவும் அவசியம் எனவும் கூறினர்.
அறப்போர் இயக்கமானது தங்களது அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளாட்சி ஆணையர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் என அனைவருக்கும் புகாராக அனுப்பியுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு ஒரு அறிக்கையாகவும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு மற்றொரு அறிக்கையாகவும் நாங்கள் எடுத்துள்ள அறிக்கையை அனுப்பியுள்ளதாகவும் இந்த சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும் எனவும் அறப்போர் இயக்கத்தினால் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.