Chennai Book Fair-சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்று வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு சில புத்தகங்களை குறிப்பிட்டு இளைஞர்களை வாசிக்க சொல்லிய கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
சென்னை புத்தகக் கண்காட்சியில் சுவேதா எழுதியுள்ள நிப்பானம், கிரேஸ் பானு எழுதியுள்ள ‘தீட்டுப்பறவை’,ஆல்காவின் ‘காலிடுக்கில் ஒப்பந்தங்கள்’, திருநம்பி கவிஞர் ப.ஸ்ரீகாந்தின் ‘அவளுக்கென’, திருநம்பி சோனேஷ் எழுதியுள்ள ‘உன்னைக்கொடு’,
கல்கி சுப்ரமணியம் எழுதியுள்ள ‘குறி அறுத்தேன்’ மற்றும் ‘ஒரு திருநங்கையின் டைரி குறிப்பு’ ஆகிய நூல்களை அன்பு உறவுகள் வாங்கி வாசித்துணர வேண்டும்.
முழுவதும் நமது அன்பிற்குரிய திருநங்கை மற்றும் திருநம்பி சகோதர சகோதரிகளால் எழுதப்பட்டுள்ள இந்நூல்கள் மூன்றாம் பாலினத்தவர் குறித்த சமூகப்பார்வையை மாற்றும் வல்லமை வாய்க்கப்பெற்றவை.
இயற்கையின் படைப்பில் மூன்றாம் பாலினத்தவராய் பிறந்துவிட்ட ஒற்றைக்காரணத்திற்காக தங்கள் வாழ்வில் சந்தித்த துயரங்களையும், குடும்பம் தரும் இழப்புகளையும்,
சமூகம் தந்த அவமானங்களையும், தங்களது வலி மிகுந்த வாழ்வியல் அனுபவங்களையே வார்த்தைகளில் வடித்துள்ளதை வாசிக்கும்போது உள்ளத்தை உலுக்குகிறது;
குறிப்பாக ஈழம் குறித்தும் தங்கை இசைப்பிரியா குறித்தும் கல்கி சுப்ரமணியத்தின் கவிதையை வாசிக்கும்போது கண்களில் நீர் பெருகுகிறது.
இன்றைக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த பார்வையும் மதிப்பீடும் மாறியுள்ளது என்றாலும் முழுமையாக இன்னும் மாறிவிடவில்லை என்பதையே இந்நூல்களில் உள்ள செய்திகள் நமக்கு உணர்த்துகிறது.
உள்ளத்து உணர்ச்சிகளுக்கும், சமூகம் வகுத்து வைத்துள்ள கட்டுப்பாடுகளுக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள்தான் இந்த புத்தங்கள்;
கட்டுடைக்கப்பட்ட சமூகக் கோட்பாடுகளிலிருந்து தங்களது வாழ்வினைக் கட்டமைத்துக்கொண்ட மனிதர்கள் வழியே புதிய உலகத்தை நம் கண் முன்னே காட்சிப்படுத்துகின்றன.
Also Read :https://itamiltv.com/siddaramaiah-comments-on-ram-temple-inauguration/
இப்புத்தகங்களை வாசிக்கும்பொழுது இரத்தமும், சதையுமாக நம்முடன் வாழும் சக மனிதர்களை நம் முழுமையாக உணர்ந்து, உள்வாங்கி புரிந்துகொள்ள முடியும்.
*எப்படி நெடுங்காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட குடிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, பெண்களுக்கென்று தனித்தொகுதிகள் வழங்கப்படுகிறதோ அதுபோல சமூகத்தால் புறக்கணிக்கப்படும்
மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தங்களின் கோரிக்கைக்காக மூன்றாம் பாலினத்தவர் வீதிக்கு வந்து போராட வேண்டுமென்றோ,
நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டுமென்றோ எதிர்ப்பார்க்காமல் அரசே தனிச்சட்டமியற்றி உடனடியாக மூன்றாம் பாலினத்தவருக்கான உள் ஒதுக்கீட்டு உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நாம் தமிழர் கட்சி 2016 ஆம் ஆண்டு தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டின் முதல் திருநங்கை சட்டமன்ற வேட்பாளாரை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடச் செய்தது. இது நாம் வழங்கும் சலுகை அல்ல; அவர்களுக்கான உரிமை!
ஆகவே, தனி இட ஒதுக்கீடு என்ற தங்களின் உரிமையைப் பெறுவதற்கு மூன்றாம் பாலினத்தவர் மட்டும்தான் இக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றில்லை;
நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்காகக் குரல் கொடுக்க, போராட முன்வரவேண்டும். அதற்கான புரிதலை(Chennai Book Fair)சென்னை புத்தகக் கண்காட்சியில் இப்புத்தகங்கள் நிச்சயம் ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.