நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் கைகொடுத்து தூக்கி விட்டு வாழ வைத்து கொண்டிருக்கும் நம்ம சென்னையின் 384 ஆவது பிறந்தநாள் இன்று.
‘சென்னை தினம்’ கொண்டாடப்பட தொடங்கியதற்கும் ஓர் வரலாறு உள்ளது. சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய பத்திரிக்கையார்கள் மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.
முதன் முதலாக ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ‘சென்னை தினம்’ இன்று கொண்டாடப்படுவதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில்..
சென்னை 384: இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநகராக மாற்ற கடுமையாக உழைப்போம்!
சென்னை மாநகருக்கு இன்று 384-ஆம் பிறந்தநாள். சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது.
சென்னை நாள் கொண்டாடும் சென்னை மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 384 ஆண்டுகளில் சென்னை அடைந்த வளர்ச்சி வியக்கத்தக்கது. இந்திய காவல்துறை இங்கு தான் உருவாக்கப்பட்டது;
சென்னை தான் இந்தியாவின் பழமையான (மா)நகராட்சி. சென்னைக்கு இந்த பெருமைகள் மட்டும் போதாது. இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநகராக சென்னை மாற வேண்டும்.
அதற்காக கடுமையாக உழைக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்! என்று தெரிவித்துள்ளார்.