சென்னையில், பைக் டாக்ஸியில் (rapido bike) பயணித்த பெண் ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த 34 வயதாகும் சேவிகா என்ற பெண் அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒப்பனை கலைஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சேவிகாவுக்கு பிறந்தநாள் என்பதால் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சேவிகா சென்னை தி.நகர் தலையாரி தெருவில் உள்ள தனது தோழிகள் அறைக்கு சென்றுள்ளார். இரவு 12 மணி அளவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பிறகு அதிகாலையில் வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வற்காக பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார்.
இதையடுத்து, அங்கு வந்த மேற்கு மாம்பலம் திருவள்ளுவர் சாலையை சார்ந்த 34 வயதாகும் ஆனந்தன் என்ற பைக் டாக்சி ஓட்டுனருடன் ஹெல்மெட் அணியாமல் சேவிகா இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், சரியாக அதிகாலை 4:30 மணி அளவில் அண்ணா சாலை காமராஜர் அரங்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது டிப்பர் லாரி ஒன்று பைக் டாக்ஸி (rapido bike) மீது மோதி விட்டு வேகமாக சென்றுள்ளது. இதில் பைக்கில் சென்று கொண்டிருந்த இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளனர்.
பைக் டிரைவரான ஆனந்தனுக்கு கை கால்கள் உடம்பு என சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட நிலையில், சேவிகாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
அதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சேவிகா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பைட் டாக்ஸி டிரைவரான ஆனந்தன் என்பவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பைக் டாக்ஸியை மோதிவிட்டு நிற்காமல் சென்ற டிப்பர் லாரியை சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பைக் டாக்ஸி டிரைவரான ஆனந்தன் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் (304 A) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்த நாள் அன்றே சாலை விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக பைக் டாக்ஸி சேவையை தடை செய்ய வேண்டும் என ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ரேபிடோவில் பயணித்த பெண் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.