நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கிறது. இதில் சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜனவரி மாத இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பரவல் அதிகரித்தது. இந்நிலையில் கொரோனா பரவல் முடிந்ததும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கிறது. இதில் சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பட்டியலின பிரிவு பெண்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இது போக மற்ற முக்கியமான மாநகராட்சிகள் மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.