வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், இது வருகிற 3-ஆம் தேதி வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வருகிற 4-ந்தேதி சென்னைக்கு வடக்கே ஆந்திர மாநில பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு நாளை (02.12.23) முதல் வருகிற 5-ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3-ல் உருவாகும் புயல், 4-ம் தேதி மாலை சென்னை- மசூலிப்பட்டணம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வருகிற 3-ம் தேதி சென்னை முதல் கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
4-ம் தேதி சென்னை, திருவள்ளூரில் மிக கனமழை பெய்யும். அப்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
இதனால், அடுத்த 4 தினங்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வட தமிழக கடலோர பகுதி, மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்” என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.