வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு இன்று 384 ஆவது பிறந்தநாள். நம் எல்லோருக்கும் ஏதோ இரு வகையில் கைகொடுத்து தூக்கி விட்டு வாழ வைத்து கொண்டிருக்கும் நம்ம சென்னை பற்றி இந்த நாளில் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் தானே.
கி.பி. 1639 இல் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி தங்களது வியாபார சூழ்ச்சியால், தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த இந்த ஆகஸ்ட் 22 ஐ குறிக்கும் வகையிலேயே சென்னை தினம் உள்ளது .
மறுபுறம் தற்போதைய தலைநகரம் என்ற முறையில் சென்னை என்ற நிலப்பகுதியாக உருவானதற்காக கொண்டாடப்படுகிறது. அப்போது வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் தான் இப்பகுதி சென்னப்பட்டினம் என அழைக்கப்பட்டு பின் சென்னை ஆனது.
மறுபுறம் ஆங்கிலேயர்களால் ‘மதராஸ்’ என அழைத்த வரலாறும் நாம் அறிந்ததே. மேலும், ஆங்கிலேயரின் காலத்தில் இப்பகுதி ‘கருப்பர்களின் நகரம்’ என அழைக்கப்பட்ட வரலாறும் உண்டு. சென்னை என்ற பகுதி உருவாக இப்படியான ஒரு வரலாறு இருக்கும்பட்சத்தில் ‘சென்னை தினம்’ கொண்டாடப்பட தொடங்கியதற்கும் ஓர் வரலாறு உள்ளது.
பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம். முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் தனித்துவம் சிறப்பம்சம் என்னவென்றால் அதில் முதலாவது அதன் பன்முகத்தன்மை. தமிழகத்தின் இதர மாவட்டங்களின் கலாச்சார, பழக்க வழக்கங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறுபட்ட கலாச்சார, பழக்க வழக்கங்களையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் நம் சென்னைக்கு இன்று 384-வது பிறந்த நாள்.