44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக தொடங்கியது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தொடக்கவிழாவில் தமிழ் பாரம்பரிய வாசமான பட்டு வேஷ்டி சட்டையுடன் வருகை தந்துள்ளார்.
தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.20 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய சேஸ் ஒலிம்பியாட் விழாவில், 186 நாடுகளின் பெயர்களை ஒவ்வொன்றாக சொல்லி வரவேற்றனர். பிறகு இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரங்களை உலகிற்கு தெரிவிக்கும் வகையில், இந்தியாவின் 8 மாநிலங்களில் உள்ள பாரம்பரிய கலைகளான கதக், உச்சிப்புடி, பரதநாட்டியம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதற்கிடையே, பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்கிறார். பிரதமர் வந்ததும், அவரால் டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டு 75 நகரங்களை கடந்து வந்துள்ள ஒலிம்பியாட் ஜோதி, மேடைக்கு எடுத்து வரப்படும். அதைத் தொடர்ந்து, போட்டியை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
கோலாகலமாக தொடங்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியை சர்வதேச நாட்டின் போட்டியாளர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.