போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகிறது. 5 வயதுக்கு உட்பட்ட 57.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து கொடுக்க தமிழக சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மாநில எல்லைகளிலும் போலியோ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கலந்துகொள்ள முடியாத சூழலில் உள்ளவர்களின் நலனுக்காக, அடுத்த 3 நாட்களில் மீண்டும் போலியோ மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. இதில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கை கழுவதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முகாமில் பங்கேற்கலாம். விடுபடும் குழந்தைகளை கண்டறிய, சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் முதல்வர் ஸ்டாலின் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கிவைத்தார். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சொட்டு மருந்து வழங்கினார் . நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்னன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.