வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அக்டோபர் இறுதி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில் பருவமழை காலத்தில் ஏற்படகூடிய பாதிப்புக்கள் குறித்தும் அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அந்த கூட்டத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறையினரும் இணைந்து பருவமழை பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பருவமழை காலங்களில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும்போது, முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார் என்றும் தவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த செயலாளர்களும் பங்கேற்றனர்.