பள்ளிக்குழந்தைகளை பல மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் காக்க வைத்த சம்பவம் நடிகர் சூர்யா மற்றும் மதுரை எம்பி வெங்கடேசன் ஆகியோர் மீது தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினர் மற்றும் மதுரை தொகுதி எம்பி வெங்கடேசன் ஆகியோருடன் நேற்று பார்வையிட்டுள்ளார்.
அதற்காக அங்கு பார்வையிட வந்த பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் பல மணி நேரம் ஏப்ரல் மாத வெயிலில் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் சூர்யா தனது குடும்பத்தோடு பார்வையிடுகிறார் என்பதற்காக அருங்காட்சியகத்தின் வாயிலை பூட்டி வைத்து பள்ளி மாணவர்களை ஏப்ரல் மாத கொடூர வெயிலில் காக்க வைத்தது மனிதாபிமானமற்ற செயலாகும்.
எம் பி வெங்கடேசன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது வேதனைக்குரியது. மக்களோடு மக்களாய் கலந்து மக்கள் பிரதிநிதியாக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்,
குழந்தைகளை சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து வாட்டி வதைத்தது மனிதத்தன்மையற்ற செயலாகும் இதனை இந்துமுன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
சிவகங்கை மாவட்டம் கீழடி , தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் போன்ற அருங்காட்சியகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் ஆகும்.

ஆனால் இத்தகைய அருங்காட்சியகங்களில் பெரும்பாலும் கம்யூனிச இடதுசாரி சிந்தனையாளர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இடதுசாரி சிந்தனையாளர்களாகவும் இடதுசாரி சிந்தனையாளர்களின் ஏவலாளர்களாகவும் இருப்பதாக தெரிய வருகிறது . நேற்று நடைபெற்ற சம்பவமே அதற்கு சான்றாகும். மத்திய அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழடி அருங்காட்சியகத்தில் பள்ளி குழந்தைகள் கொளுத்தும் வெயிலில் ஒன்றரை மணி நேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவத்தை தேசிய குழந்தைகள் நல ஆணையம் நேரடியாக விசாரித்து தவறு செய்த அதிகாரிகள் மற்றும் சூர்யா குடும்பத்தினர் மீதும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.