பொறியில் மாணவர் சேர்க்கையின் போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என உயர்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
பொதுவாக, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின்போது, மாணவர்கள் ஒரே மாதிரியான தரவரிசை மதிப்பெண்களை பெற்றுள்ள பட்சத்தில் ரேண்டம் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதன்படி, மாணவர்களின் தரவரிசை மதிப்பெண், இயற்பியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண், கணித பாடதில் பெற்றுள்ள மதிப்பெண் மற்றும் விருப்ப பாடத்தில் பெற்ற மதிப்பெண், பிறந்த தேதி உள்ளிட்டவை ஒன்றாக இருக்கும் போது இறுதியாக ரேண்டம் எண் பயன்படுத்தப்படும்.
அந்த வகையில், ரேண்டம் என் கணக்கீடு வரிசையில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், கடந்த 2021- 22 ஆம் கல்வி ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டனர்.
இதனால், 2021- 22 ஆம் கல்வி ஆண்டு பொறியியல் கலந்தாய்வில், பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்களின் தரவரிசை மதிப்பெண், இயற்பியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண், விருப்ப பாடத்தில் பெற்ற மதிப்பெண் மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி, பிறந்த தேதி ஆகியவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நிலையில் இருக்கும்போது, கடைசியாக ரேண்டம் எண் பயன்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.