மத்திய பிரதேசத்தில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவர்கள் வகுப்பறையில் வைத்து 108 முறை காம்பஸ் மூலம் தாக்கியுள்ள சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஏரோட்ரோம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி அன்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையில் சண்டை நடந்துள்ளது. அதில் 3 மாணவர்கள் சேர்ந்து தன்னுடன் படிக்கும் மாணவனை காம்பஸ் மூலம் தாக்கியுள்ளனர்.
அன்று மாலை பள்ளி முடிந்து அந்த சிறுவன் வீடு திரும்பிய நிலையில், மாணவனின் உடலில் இருக்கும் காயத்தை பார்த்த அவரது தந்தை அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி அந்த சிறுவனிடம் கேட்டபோது தனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தன்னை தாக்கியதாக தந்தையிடம் கூறியுள்ளான்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை பள்ளிக்கு சென்று சிசிடிவி வீடியோவை கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் அதனை கொடுக்க மறுத்த நிலையில் ஏரோட்ரோம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குழந்தைகளும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என காவல் உதவி ஆணையர் விவேக் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை சக மாணவர்களே காம்பஸ் மூலம் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.