டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான முறையில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான விஸ்வா தீனதயாளன் மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பங்கேற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.காம் படித்த விஸ்வா தீனதயாளன் ஷில்லாங்கில் இன்று தொடங்கும் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கௌஹாத்தியில் இருந்து சக போட்டியாளர்களுடன் காரில் சென்றுள்ளார்.
இந்த நிலையில், ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த 12 சக்கரங்களுடன் கூடிய டிராய்லர், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இதில் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஸ்வா தீனதயாளன் நோங்போ சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எங்கள் இளம், நம்பிக்கை நட்சத்திரம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனின் மறைவு இதயத்தை நொறுக்கியது.
அவரது அகால மரணம் பற்றி கேள்விப்பட்டு வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சி அடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் ஒரு லெஜண்ட்-மேக்கிங், அவர் மிக விரைவில் எங்களை விட்டு பிரிந்தது எனக்கு வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு துறை சகோதரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.