கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக பணியாற்றி வந்த விஜயகுமார் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :
கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக திறம்பட பணியாற்றி வந்த திரு.விஜயகுமார் ஐ.பி.எஸ் அவர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து துயருற்றேன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை மாநகர காவல்துறையின் துணை ஆணையர், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகிய பணிகளில் துடிப்புடன் செயல்பட்ட விஜயகுமார் அவர்களின் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.