சாலைவிபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சென்னை வடமண்டல குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதாவின் மருத்துவ செலவிற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிருப்பதாவது
கடந்த 9-8-2023 அன்று இராயபுரம் NRT மேம்பாலத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலைவிபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சமூக ஆர்வலரும், சென்னை வடமண்டல குழந்தைகள் நலக்குழு உறுப்பினருமான திருமதி. லலிதா அவர்களின் குடும்பத்தினர் மருத்துவச் செலவிற்கு போதுமான நிதியின்றி பெரிதும் சிரமப்பட்டு வருவதாகவும் அவருக்கு நிதியுதிவி வழங்கக் கோரியும் கோரிக்கை வரப்பெற்றுள்ளது.
வழக்கறிஞர் திருமதி.லலிதா அவர்கள் குழந்தைகள் நலக்குழு உறுப்பினராகவும், ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்டஆலோசனை உதவிகளை அளித்தும் மக்கள் பணியாற்றி வருகிறார். அவருடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அவர் விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியில் ஊக்கத்துடன் செயலாற்றவும், அவரது மருத்துவச் செலவுக்கு 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்திரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.