கோவை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திடீரென விவசாயிகள் காலில் விழுந்து கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு, கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் அக்கரைசெங்கபள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கலூர், இலுப்பநத்தம், பள்ளிபாளையம் 6 பஞ்சாயத்தில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகள் 200 பேர் கோவை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
அன்னூர் வட்டாரத்தில் 4 வருவாய் கிராமங்கள், மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் 2 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 3800 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த மூதாட்டி உள்பட சிலர் கலெக்டரின் காலில் விழுந்து, நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என்று கதறினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.