Lockdown : சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை – புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு..
புதுச்சேரியில் அரங்கேறிய சிறுமி ஆர்த்தியின் கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 19 வயதுடைய கருணாஸ் மற்றும் 54 வயதான விவேகானந்தன் ஆகிய இருவரும் தற்போது காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுக – அன்புமணி!
சிறுமி கொலை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள கலைவாணன் தலைமையிலான சிறப்புக்குழு, சிறுமியின் அண்டை வீட்டாரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறுமி ஆர்த்தி கொலைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று (07.03.24) அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
அதில், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி , திமுக அமைப்பாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து இன்று (08.03.24) இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் தனித்தனியாக முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக வழக்கறிஞர்களும் அறிவித்து உள்ளனர்.
இன்று திரையரங்குகளிலும் நண்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : மகளிர் தினத்தை ஒட்டி கேஸ் சிலிண்டரின் விலையை ₹100 குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு
தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வணிக வளாகங்கள் என எதுவும் இயங்காது எனவும், கடைகள் முழுவதும் அடைக்கப்படும் Lockdown எனவும் அந்தந்த சங்கங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், முழு அடைப்பு காரணமாக, புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.