மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:
மிகஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை, வெள்ளப் பாதிப்புகளால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும். அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சிறப்பான முறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம். மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபட்டு, படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு அளிக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.