ஆந்திர மாநிலத்தில், தலைமை காவலர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில், வெங்கடேஸ்வரலு என்ற நபர் தலைமை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு பணி முடித்து வீடு திரும்பிய வெங்கடேஸ்வரலு இன்று அதிகாலையில் தனது மனைவி மாதவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பிறகு தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிகாலையில், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைத்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அந்த குடும்பத்தினர் 4 பேரும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.
அதன் பின்னர், அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
சம்பவத்தன்று காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் பணியில் இருந்த தலைமை காவலரான வெங்கடேஸ்வரலு பொறுப்பில் இருந்துள்ளது. இந்த நிலையில் உயர் அதிகாரியின் கை துப்பாக்கியை திட்டம் போட்டு எடுத்து வந்த வெங்கடேஸ்வரலு அவரது மனைவி, மகள் ஆகியோரை சுட்டு கொலை செய்து விட்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும், அவரது வீட்டில் தற்கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஆகிவற்றையும் போலீசார் கைப்பற்றிய நிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்டுள்ள கடிதத்தில் இருக்கும் தகவல்களை பின்னர் வெளியிடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.