மதம் மாறியவர்களை தாய் மதத்திற்கு கொண்டுவர வேண்டும் என பாஜக தலைவரும் பெங்களூரு தெற்குத் தொகுதி மக்களவை உறுப்பினருமான தேஜஸ்வி சூரியா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை பாஜக எம்.பியான தேஜஸ்வி சூர்யா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருபவர். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஒரு பெண் இவர் மீது பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. தேஜஸ்வி சூர்யா பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர் என அப்போது காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்து மதத்தை விட்டுச் சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் தாய் மதமான இந்து மதத்திற்குள் கொண்டு வர வேண்டும், இதற்காக ஒவ்வொரு கோயில் மற்றும் மடங்களுக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். இந்து மதத்திலிருந்து போனவர்கள் மீண்டும் இந்து மதத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
“இந்துக்களுக்கு உள்ள ஒரே தெரிவு, இந்து மதத்தை விட்டுச் சென்றவர்களை மீண்டும் தாய்மதத்துக்கு மாற்றுவதே. இது நமக்கு கைவந்த கலையாக இருக்கவில்லை, நாம் பரிணாமம் அடைய வேண்டும். இந்த உருமாற்றம் நம் டி.என்.ஏ.வில் வர வேண்டும்.
டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று உடுப்பியில் நிகழ்ச்சி ஒன்றில் தேஜஸ்வி சூரியா இப்படிப் பேசியுள்ளார். மீண்டும் தாய்மதத்துக்கு மாற்றுவது நமக்கு கைவந்த கலையாக மாற வேண்டும் அதற்கான மனநிலையை இந்துக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என தேஜஸ்வி சூரியா பேசினார்.
கர்நாடகாவில் மதம் மாறுவதற்கு எதிராக மத மாற்றத் தடை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கும்பலாக மதம் மாறுபவர்களுக்கு சிறைத்தண்டனைதான் என்பது தான் இந்தச் சட்டம். சலுகை, பணத்தாசை காட்டியோ, கட்டாயமாக மதம் மாறுவதையோ, முறைகேடாக ஏமாற்றி மதம் மாற்றுவதையோ இந்த சட்டம் தடை செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர்களும், ஏழைகளும் அதிகளவில் மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. கட்டாய மதமாற்ற புகாரில் கிறிஸ்தவ பாதிரியார்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் மதம் மாறியவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு கர்நாடக அரசு உத்தவிட்டது. இதைத் தொடர்ந்து கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதா உண்மையில் 2016 ஆம் ஆண்டு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டதாக மாநில சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி கூறினார்.
ஆனால் 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வரைவு மசோதா, தற்போதைய பாஜக அரசு கொண்டு வந்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்திய சாசன சட்டம் ஒருவர் தான் விருப்பட்ட கொள்கையையோ, அல்லது மத கலாச்சாரத்தையோ பின்பற்றலாம் என்ற உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் இந்த மதமாற்ற தடை சட்டத்தின் மூலம் தானாக முன்வந்து வேறு மத கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்களை கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களாக சித்தரிக்கபடும் நிலை ஏற்படும் என கூறி எதிர்கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்தனர்.