பாட்னாவின் நாலந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 159 பேரும், பாட்டியாலா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா டெல்டா, டெல்டா பிளஸ் என இரண்டு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது 3வது அலை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தொற்று நோயியல் நிபுணர்கள் சிலர் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் சில மாநிலங்களில் 3வது அலை தொடங்கி விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை பரவியதை அடுத்து தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டதால் நோய்ப்பரவல் கட்டுக்குள் வந்தது. இதன் பின்னர் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. கல்வி நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. பின்னர் கட்டுப்பாடுகளும் படிப்படியாக நீக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது கல்வி நிலையங்களில் கொத்துக் கொத்தாக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 மருத்துவ மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஹாஸ்டலில் தங்கியிருந்து படித்து வரும் மாணவர்கள் உடனடியாக தங்களின் அறைகளை விட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது போல பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நாலந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில மருத்துவர்களுக்கு அறிகுறி தென்பட்டதால், கடந்த ஜனவரி 2ம் தேதியன்று 194 மருத்துவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 84 மருத்துவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என நேற்று முடிவு வந்தது. இன்று மேலும் 72 மருத்துவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது.