கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாகவும், அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆண்டு உலக அளவில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து தாக்கங்களை ஏற்படுத்தியது. இந்தியாவில் இதன் தாக்கத்தால் பலரும் பாதிக்கப்பட்டனர். பலர் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
மத்திய மாநில அரசுகளின் தொடர் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பினாலும், இந்த கொரோனா வைரசை முற்றிலுமாக ஒழிப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தினாலும் மீண்டும் உருமாற்றம் அடைந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்குகிறது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டு வந்த நிலையில், சமீப நாட்களாக மீண்டும் ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா இந்தியாவில் சில மாநிலங்களில் பரவத் தொடங்கி உள்ளது.
அதன் படி கேரளாவில் கடந்த சில நாட்களாக ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் இதில் கவலைப்படும் வகையில் எதுவும் இல்லை.
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கேரளாவில் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கப்பூர் விமான நிலையத்தில் 19 இந்திய பயணிகளுக்கு ஜே.என்.1 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று உயர வாய்ப்புள்ளது.” இவ்வாறு வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.