கோவை வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமதித்த வழக்கில், இந்து முன்னணியைச் சேர்ந்த அருண் கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோர போலீசார் கைது செய்தனர். இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியார் படிப்பகத்தில் திராவிட கழகத்திற்கு சொந்தமான பெரியார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிந்தும் தலை பகுதியில் காவி சாயம் பூசியும் அவமரியாதை செய்திருந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பெரியார் ஆதரவாளர்களும் அரசியல் கட்சியினரும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். அந்த சிலை அருகே ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரியார் சிலை தமிழகத்தில் தொடர்ந்து அவமதிக்கப்படுவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். அத்துடன் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் கோவை வெள்ளலூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் இந்து முன்னணி ஆதரவாளர் அருண் கார்த்திக், அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.