கடந்த இரண்டுமாதங்களில் கொரோனாவால் மரணித்தவர்களில் 87 சதவீதம் பேர் யாரென்ற அதிர்ச்சி தகவலை பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில் கொரோனா தடுப்பூசி உயிரிழப்பை வெகுவாக தடுக்கிறது என்று கூறியுள்ளார்.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 1,626 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 1,419 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் எனவும்,
தடுப்பூசி செலுத்தியிருந்தால் பெரும்பாலான இறப்பை தவிர்த்திருக்க முடியும் என அவர் கூறியுள்ளார். அதேபோல் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களில் 9 சதவீதம் பேர் மட்டுமே மரணித்துள்ளனர் என்று கூறிய அவர்,
இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் வெறும் நான்கு சதவீதம் பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த இரு மாதங்களில் 88 ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டதில் தடுப்பூசி செலுத்திய 45 சதவீதம் பேர் பாதிப்பின்றி வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள 5816 பேரில் 4405 பேர் தடுப்பூசி போடாதவர்கள் என தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாக உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த இரண்டு மாதங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 87 சதவீதம் பேர் தான் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.