டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சென்னை காவேரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது .
கடுமையான காய்ச்சலால் அவதிபட்டு வரும் சுப்மன் கில்லுக்கு பல விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் . இதனால் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சில ஆட்டங்களில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்பட்டது .
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியிலும் சுப்மன் கில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது .
இதற்கிடையில் தற்போது சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சுப்மன் கில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்-க்கு ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைந்து வருவதால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் இருப்பதால் உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியிலும் சுப்மன் கில் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியகியுள்ளது.
இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் டெங்குவால் அவதிப்பட்டு வரும் சுப்மன் கில் பூரண நலம் பெற்று அணிக்கு விரைவில் திரும்ப வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பிராத்தனை செய்து வருகின்றனர்.