மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன மடாதிபதியை மிரட்டி பணம் கேட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் உள்ள சைவ மடங்களிளேயே மிகப் பழமையான மடம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனம். இந்த மடத்தின் மடாதிபதியுடைய ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாகக் கூறி மிரட்டிய விவகாரத்தில் திமுக, அதிமுக, பாஜக என கட்சி பேதமின்றி பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் ஆன்மீகவாதிகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள மடங்களிலேயே கிட்டத்தட்ட சுமார் 600 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் தருமபுர ஆதீனத்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல், காசி உட்பட பல்வேறு வட மாநிலங்களிலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும், ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் 20க்கும் மேற்பட்ட கோவில்களும் உள்ளன.

தற்போது இம்மடத்தின் 27-வது மடாதிபதியாக பட்டம் வகித்து வருபவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள். அதே மடத்தின் கணக்காளராகவும், மடாதிபதியின் உதவியாளராகவும் இருப்பவர் விருத்தகிரி. மடாதிபதி மாசிலாமணி தேசிக பரமாச்சாரியாரின் தம்பியான இவர் கடந்த வாரம் 21ஆம் தேதியன்று காவல்துறையில் ஒரு புகார் அளித்தார்.
இதையும் படிங்க: ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லும் வீரரை மணந்தார் நடிகை லெனா
அதில், ‘தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.

மேலும் தங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவர் தொடர்பு கொள்வார் என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம்,

வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் மற்றும் திமுக செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்றும், இதனால் மடத்தில் உள்ள அனைவருமே மன உலைச்சலில் தவிப்பதால் மிரட்டும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 25ஆம் தேதியன்று இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சென்னையில் பதுங்கியிருந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, ஆடுதுறையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் வினோத் ,
திருவெண்காடு ரவுடி விக்னேஷ், உடந்தையாக செயல்பட்ட ஸ்ரீநிவாஸ் உட்பட 4 பேரை நேற்று கைது செய்து சிறைவில் அடைத்ததுடன், இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட மேலும் 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1763157628669309163?s=20

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்த போது அங்குள்ள பிரதான இடத்தில் அமைப்பதற்கான செங்கோல் வைப்பதற்கான நிகழ்வில் கலந்து கொண்ட பெருமைக்குறிய ஆதீன மடத்தின் அதிபர் ஒருவரே ஆபாச வீடியோ தொடர்பாக மிரட்டப்படடிருப்பது ஆன்மீகவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு, நடந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பேசப்படும் தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன!