சோமாலியா ஓட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 19-ம்தேதி சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உள்ள ஹயாத் ஓட்டலை அல் ஷாபாப் தீவிரவாதிகள் சிறைபிடித்தனர். அப்போது ஓட்டலில் தங்கி இருந்த சுமார் 250 பேர் பத்திரமாக மீட்கும் முயற்சியில் சோமாலிய ராணுவ வீரர்களும் போலீஸாரும் ஈடுபட்டனர்.
ஓட்டலை சுற்றிவளைத்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் 30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு ஓட்டலுக்குள் இருந்த 106 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
எனினும், தீவிரவாதிகளின் தாக்குதலில் ஓட்டல் ஊழியர்கள், அங்கு தங்கியிருந்தவர்கள் என 40 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது