ஒன்றிய அரசு இந்தி மொழி திணிப்பை கண்டித்து நடைபெற்ற திமுக போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை வருங்கால தலைவர் என தயாநிதி மாறன் பேசியது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாடு என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அந்த வகையில் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவற்றிலும் ஒன்றிய பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்யவேண்டும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம் என்றும், எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார். தமிழ்நாடு மட்டுமல்ல, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசியல் தலைவர்களும் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இந்தியை திணிப்பது நாட்டின் கூட்டாட்சி முறைக்கு நல்லதல்ல என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
தென் மாநிலங்களைத் தாண்டி, மேற்குவங்கம் உட்பட நாடு முழுவதும் இந்தித் திணிப்புக்கு எதிராக போர்க்குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழர்கள், கன்னடர்கள், பஞ்சாபியர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக, ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசும்போது, “பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம்; எங்களுடைய மொழி உணர்வை வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்; வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு தான், இந்தி மொழியை திணிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.
பிரதமர் மோடி, அமித்ஷாவே! உங்கள் தாய்மொழி என்ன ஹிந்தியா? குஜராத்தி தானே! உங்களுக்கு மொழி உணர்வு கிடையாதா? ஒன்றிய அரசு தேர்தல் வரும்போதெல்லாம் முதலில் கையிலெடுப்பது மதம், அடுத்ததாக இந்தி மொழி திணிப்பு.. பிரதமர் மோடியே! உங்களுடைய பருப்பு இங்கு வேகாது” என பேசினார். தயாநிதி மாறன் பேச ஆரம்பித்த தொடக்கத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை ’கழகத்தின் எதிர்கால தலைவர்’ என பேசியது அங்கு குழுமியிருந்த திமுக தொண்டர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது.
ஏற்கனவே திமுக குடும்ப கட்சியாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் உட்பட பலரும் முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில், தயாநிதி மாறன் உதயநிதி ஸ்டாலினை வருங்கால தலைவர் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணா, கலைஞர் கருணாநிதியை பார்த்து அவர்களுடன் அரசியல் பணியாற்றிய மூத்த தலைவர்கள் திமுகவில் இருக்கும்போது, உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தி தலைவர் என தயாநிதி மாறன் பேசியிருப்பது, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.