ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா? – குழப்பத்தில் கிராம மக்கள்..!

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசின் முடிவுக்காக மாவட்ட நிர்வாகம் காத்துக்கொண்டிருக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பொங்கல் தினமான 14-ந் தேதி அவனியாபுரம், 15-ந் தேதி பாலமேடு, 16-ந் தேதி அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை கிராம விழா குழுவினர்கள் செய்வார்கள். ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெறும். அதே போல் இந்தாண்டும் போட்டிக்கான ஆயத்த பணிகளில் கிராம விழா கமிட்டியினர் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே இந்த போட்டியை நடத்த கூடாது என்று பீட்டா அமைப்பு சார்பாக 60-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கையெழுத்திட்டு முதல்-அமைச்சருக்கு மனு கொடுத்து இருந்தனர். ஆனால் போட்டிகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி முறையாக நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி கடந்த 2 தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கும், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கும் திடீரென அறிவிக்கப்பட்டது. அதில் 16-ந் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை வருவதால் இந்த போட்டி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்தது.

ஒருவேளை அலங்காநல்லூர் போட்டி தவிர்க்கப்பட்டு, அவனியாபுரம்-பாலமேடு போட்டிகள் மட்டும் நடைபெறுமா அல்லது பார்வை யாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அலங்காநல்லூர் போட்டியை தவிர்த்து அவனியாபுரம்-பாலமேடு போட்டிகளை மட்டும் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் ஒன்று 3 இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் அல்லது எங்கும் நடைபெறாது, பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.

ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்றும், அரசின் விதிகளை பின்பற்றுவதற்கு தயாராக இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மதுரையில் 12-ந் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் தற்போது எழுந்து உள்ளது. அதற்கிடையில் நேற்று காலை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தடுப்பு அமைப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த பள்ளங்கள் மூடப்பட்டு பணிகள் நிறுத்தப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்தும், மதுரை மாவட்டத்தில் தற்போது உள்ள கொரோனா பாதிப்பு குறித்து கலெக்டர் அனிஷ் சேகர், அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். அதில் தமிழக அரசு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். எனவே அரசின் முடிவுக்காக மாவட்ட நிர்வாகம் காத்திருக்கிறது. அரசு முடிவை பொறுத்து தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? நடைபெறாதா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Total
0
Shares
Related Posts