லட்சத்தீவு காங்கிரஸ் எம்பி முகமது பைசலின் தகுதி நீக்கத்தை நாடாளுமன்ற மக்களவை செயலகம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பானது ராகுல் காந்தியின் விவகாரத்திற்கும் சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது பைசல், கடந்த 2009 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய மத்திய அமைச்சர் சையதுவின் மருமகன் முகமது சலியாவை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முகமது சலீம் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுப் பல மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனைத் தொடர்ந்து முகமது பைசலின் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது கவரட்டி நீதிமன்றத்தில் சுமார் ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கிய கவரட்டி நீதிமன்றம், முகமது பைசிலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் இதனை ஆய்வு செய்த நாடாளுமன்ற நெறிமுறைகுழு அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
முதன்மை நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தில் முகமது பைசில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனைக்குத் தடைவிதித்து கடந்த ஜனவரி 25ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே முகமது பைசலின் பதவி நீக்கத்தை ரத்து செய்யுமாறு சபாநாயகர் ஓம் பிரீலாவை நேரில் சந்தித்து சரத்பவார் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அவருக்குப் பதவி வழங்கப்படாத நிலையில் முகமது பைசில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அவருக்குச் சாதகமாக அமைந்தததை அடுத்து அவரது பதவி நீக்கம் திரும்பப் பெறப்பட்டது.
தற்பொழுது ராகுல் காந்தியும் இதே போல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தடை வாங்கும் பட்சத்தில் மீண்டும் ராகுலுக்கு எம்பி பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.