Nellai Constituency-நெல்லையில் காங்கிரஸுக்குள் நடக்கும் களேபரங்களால், தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி இருப்பதாக உற்சாகம் காட்டுகின்றனர் பா.ஜ.க.வினர்.
மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் பா.ஜ.க சார்பில் நயினார் நாகேந்திரன் களம் காண்கிறார். முதலில் தூத்துக்குடியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டவர், பின்னர் நெல்லைக்கு மாற்றப்பட்டார்.
அதிமுக தரப்பில் முதலில் சிம்லா முத்துச்சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திமுக முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளான அவர் சமீபத்தில் தான் அதிமுகவில் இணைந்திருந்தார். அதுமட்டுமின்றி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் இவர் போட்டியிட்டவர் ஆவார். இதனால் சிம்லாவுக்கு எதிராக கட்சிக்குள் புகைச்சல் கிளம்ப அவருக்குப் பதிலாக ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இப்படி இரண்டு கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்பிலும் சின்ன சின்ன மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு நெல்லை தொகுதி ஒதுக்கப்பட, யார் வேட்பாளர் என்பதே சிதம்பர ரகசியமாக இருந்தது. பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ரூபி மனோகரன், பால்ராஜ் என்று ஒரு கும்பலே காங்கிரஸின் தமிழக தலைமைக்கும் டெல்லி தலைமைக்கும் தூது அனுப்பிக் கொண்டிருக்க., இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்தது காங்கிரஸ் தலைமை. கடைசியில், திருநெல்வேலியில் பிரசாரத்துக்கு வந்த ஸ்டாலின் காட்டிய அதிர்வுகளால், ராபர்ட் புரூஸ் என்பவர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பேச்சி முத்துவுக்கு காத்திருக்கும் சவால்கள்..! ராமநாதபுரம் ரவுண்ட் -அப்!
இப்படி அவசர குடுக்கையாக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட காங்கிரஸுக்குள் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. கன்னியாகுமரியை சேர்ந்தவருக்கு திருநெல்வேலி தொகுதியா? ஏன் இங்கே ஆட்களே இல்லையா என்றெல்லாம் கேள்விகள் எழும்பத் தொடங்கியது. இந்த எதிர்ப்புகளின் உச்சகட்டமாக, ராபர்ட் புரூஸ், வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற அன்றைய தினம், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராமசுப்புவும் வேட்பு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் கூடாரத்துக்குள் பரபரப்பு கிளம்பியது. அது திமுகவையும் அசைத்துப் பார்த்தது.
ஏற்கனவே திமுகவிடம் இருந்த தொகுதியில், எம்.பி. ஞான திரவியத்தின் நடவடிக்கைகளால் கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் இமேஜ் டேமேஜ் ஆகி இருந்ததால்தான், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கூடாரத்துக்குள்ளேயே இப்படி மோதல் நிகழ்வது வெற்றியைப் பாதிக்கும் என்பதால் திமுகவில் இருந்தும், காங்கிரஸுக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து காங்கிரஸ் மேலிடம், முன்னாள் எம்.பி. ராமசுப்புவிடம் பேசியதைத் தொடர்ந்து அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். “நான் காங்கிரஸ்காரன்.அதனால் கட்சியின் தலைமை சொன்னதை மதித்து ராஜினாமா செய்கிறேன்” என்று பேட்டியும் தட்டியிருக்கிறார். அதே நேரம், “ராபர்ட் புரூஸுக்காக, ராமசுப்பு தேர்தல் வேலை பார்க்கப்போவதில்லை” என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கதைக்கின்றன.
அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜான்சிராணி தொகுதிக்கு புதுமுகம் ஆவார். திசையன்விளை பேரூராட்சி தலைவரான இவர் திருநெல்வேலி மாவட்ட மகளிரணி செயலாளராகவும் உள்ளார். எனவே கட்சியினர் மட்டுமே அறிந்த முகமாக இருக்கிறார்.
காங்கிரஸில் அறிவிக்கப்பட்டுள்ள ராபர்ட் புருஸும் கட்சி ரீதியாகப் பதவியில் இருந்தாலும் புதுமுகம் தான். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக தற்போது அவர் பொறுப்பில் இருந்து வருகிறார். கட்சிக்குள் இருக்கும் குழப்பங்களும், எதிர்ப்புகளும் அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கூட்டணிக் கட்சியான திமுகவினரை மட்டுமே நம்பி இருக்கும் சூழல் நிலவுகிறது.
ஆனால், திமுக தரப்பிலோ மீண்டும் தொகுதி கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் திமுகவினர் சிலர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்-னுடன் திரைமறைவில் சிநேகம் பாராட்டுவதாக உளவுத்துறை மூலம் ஸ்டாலின் வரை தகவல் போயிருப்பதாகவும் கசிகிறது.
இப்படி புதுமுக அதிமுக வேட்பாளர், திருகுவலி காங்கிரஸ் வேட்பாளர், டபுள்கேம் ஆடும் திமுகவினர் என எல்லோரும் சேர்ந்து தொகுதிக்கு மிகவும் பரீட்சயமான நயினார் நாகேந்திரனுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்து வெற்றிக்கு வித்திடுவார்கள் என்று புன்னகைப் பூக்கிறார்கள் நெல்லை தொகுதியின் கள நிலவரம் அறிந்தவர்கள்.