ஏப்ரல் 14 .. சித்திரை 01 என்பது சாதாரண மக்களுக்கு தெரிந்த நாளாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அது முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. காரணம், பாத யாத்திரை தொடங்குவேன், அன்றே திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன், என்னுடைய ரபேல் வாட்ச் பில்லை வெளியிடுவேன் என அண்ணாமலை குறித்த நாள் அது. நாளை ஏப்ரல் 14 எனும் நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு டிவிட்டர் பதிவு இட்டுள்ளார். அதுவே தமிழக அரசியலில் இன்றைய பேசுபொருள்.
DMK Files:
அப்பதிவில், “திமுகவின் ஊழல் பட்டியல் நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும்” என்பதை குறிப்பதாக DMK Files என்ற பெயரில் காணொளியும், கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. அக்காணொளியில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர். அண்ணாமலையின் இந்த பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், திமுக வட்டாரத்தில் பீதியையும் கிளப்பியுள்ளது.
13 அமைச்சர்கள்… 2 லட்சம் கோடி..
கடந்த டிசம்பர் மாதம் ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில் திமுகவின் ஊழல் பட்டியல் குறித்த கேள்விக்கு, “இதுவரை முதல்வர் உள்ளிட்ட 13 அமைச்சர்களின் சொத்து பட்டியல் தயாராகிவிட்டது. சொத்து மதிப்பு மொத்தம் 2 லட்சம் கோடி வந்திருக்கிறது.” என கூறியிருந்தார். தற்போது அந்த பட்டியல் முழுமையடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் எத்தனை அமைச்சர்களுக்கு, அமைச்சர்களின் பினாமிகளுக்கு எத்தனை கோடி சொத்துக்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளுக்கான பதில் நாளை காலை 10.15 மணிக்கு கிடைத்துவிடும் என நம்பலாம்.
தற்போதைய சூழலில், அண்ணாமலையின் இந்த நகர்விற்கு திமுகவின் பதில் நகர்வு என்னவாக இருக்கும் என்பதே அடுத்த மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வார்களா? அல்லது வாட்ச் பில்லையும், அண்ணாமலையின் சொத்து மதிப்பையும் கேட்டுக்கொண்டு இருப்பார்களா என்பது நாளையே தெரியவரும்.
பார்ப்போம் நாளை தனது சொத்து மதிப்பு, வாட்ச் பில் உடன் சேர்த்து அண்ணாமலை வெளியிடப்போகும் ஊழல் பட்டியலையும்; அதற்கு எதிரான திமுகவின் எதிர்வினையையும்..