குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்திகளை பரப்பவேண்டாம் என விமானப்படை வேண்டுகோள் விடுத்துள்ளது.
குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். விமானத்தில் இருந்த அவரது மனைவி உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். முப்படைகள் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அதிகாரிகள் குன்னூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த முப்படை விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் விரைவில் வெளிவரும். அதுவரை உயிரிழந்த ராணுவ வீரர்களின் கண்ணியத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், ஆதாரமற்ற யூகங்களை தவிர்க்கவும் என விமானப்படை செய்தி வெளியிட்டுள்ளது.