சனாதனம், வருணாசனம் இந்து மதம் என்பது என்ன ஒரு புரிதல் கூட உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை. உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பை கேட்டாலும் தண்டிக்கப்பட வேண்டியவர் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசி உள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தியாகி இம்மானுவேல் சேகரனின் 66 வது நினைவு நாள் நிகழ்ச்சி நிகழ்ச்சி செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் நடைபெற இருக்கிறது. தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் 33 வருடங்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி தான் அதை தொடங்கிவிட்டது.
2012 ம் ஆண்டு சில அசம்பாவிதம் நடந்தது. அதனை தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டில் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தியாகி இமானுவேல் சேகரன் நிகழ்ச்சிக்கு செல்லும் போது காவல்துறையினர் இடையூறு செய்கிறார்கள். அதனை காவல்துறை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
சனாதனம், வருணாசனம் இந்து மதம் என்பது என்ன ஒரு புரிதல் கூட உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை. அமைச்சர் உதயநிதிக்கு மதங்கள் குறித்து புரிதல் வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்துவாக இருந்து கொண்டு சனாதனத்தை எதிர்த்து பேசுவது மிகப்பெரிய குற்றம்.
இந்த பிரச்சனைகள் குறித்து நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். திமுகவினர் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியவில்லை. உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பே கேட்டாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்.
கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களை இதுபோன்று பேசிவிட்டு அவர்கள் நடமாட முடியுமா? என கேள்வி எழுப்பினார். மேலும் இந்தியா என்பது இந்தியா தான் பாரதம் என்பது பாரதம் தான் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, கொரனோ, மலேரியா இதை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது அதனை ஒழித்து கட்ட வேண்டும். அப்படி தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்க்க கூடாது அதனை ஒழுத்து கட்டவேண்டும் என காரசாரமாக பேசியிருந்தார்.