“சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாத காலம் மிக வேகமாக மாறி வருகிறது. பெண்களது நலனும் உரிமையும் காக்கப்படும். மகளிர் முன்னேற்றத்திற்கு நமது ‘திராவிட மாடல் அரசு’ என்றும் துணை நிற்கும்” என்று மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி
”புத்துலக ஆக்கத்திற்கு இன்றியமையாது இருக்கும் மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகள். ரத்த பேதம் – பால் பேதம் கூடாது என்ற முழக்கத்தோடு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான சமூக விடுதலைக்காகப் போராடும் இயக்கம்தான் திராவிட இயக்கம். “பெண் ஏன் அடிமையானாள்?” என்று கேள்வியெழுப்பி, அறிவொளிப் பாய்ச்சிய அறிவாசான் பெரியார் – அண்ணா – தலைவர் கருணாநிதி ஆகியோரது வழி நடைபோடும் நமது ‘திராவிட மாடல்’ அரசு, மகளிர்க்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை – அரசு வேலைவாய்ப்புகளில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இப்போது 40 விழுக்காடாக உயர்வு – தொடக்கப் பள்ளிகளில் முழுதும் பெண் ஆசிரியர்கள் நியமனம் – உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு – பேறுகால விடுப்பு ஓராண்டாக உயர்வு – மகளிர் சுய உதவிக் குழு – இலவச எரிவாயு அடுப்பு – ஈ.வெ.ரா. மணியம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிருதம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள் ஆகியோர் பெயரில் திருமண நிதி உதவி உள்ளிட்ட மகளிர் நலத் திட்டங்கள் – கல்விக் கட்டணச் சலுகைகள் – நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று பட்டியிலிட்டுக் கொண்டே செல்லலாம். இத்திட்டங்கள் பெண்களுக்கான சமூக – பொருளாதார உரிமைகளை மீட்டளிக்கும் திட்டங்கள் அதில் கூறப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்திய திட்டங்கள், இன்றைக்கு நாட்டுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளன. சொற்களால் பெண்களைப் போற்றி செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாத காலம் மிக வேகமாக மாறி வருகிறது. பெண்களது நலனும் உரிமையும் காக்கப்படும். மகளிர் முன்னேற்றத்திற்கு நமது ‘திராவிட மாடல் அரசு’ என்றும் துணை நிற்கும். அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே!” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.