பெங்களூருவில் நடக்கும் உள்ளூர் சந்தையை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு யூடியூபரை நபர் ஒருவர் தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யூடியூபர் பெட்ரொ மொடா என்பவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அது தொடர்பான வீடியோக்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜோர் பசார் என்ற சந்தை பகுதிக்கு சென்று அங்கு விற்பனை செய்யப்படும் உடைகள், உள்ளிட்ட பொருள்களை தனது கேமராவில் பதிவு செய்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் திடீரென நடந்து சென்றுகொண்டிருந்த யூடியூபர் மொடாவின் கையை பிடித்து இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், பிரச்னையை வளர்க்காமல் அவரிடமிருந்து சமாதானமாக சென்றுவிட வேண்டும் என்று நினைத்த அவர் தனது கையை விடும்படி கூறியுள்ளார்.
ஆனால், அந்த நபர் கையை விடாமல் அவரை திட்டியபடியே யூடியூபரை தாக்க முயன்ற போது, அதிர்ச்சியடைந்த யூடியூபர் அங்கிருந்து வேகமாக ஓடிச் சென்றார். மேலும் இந்த சம்பவம் அனைத்தையும் தனது கேமராவில் பதிவு செய்த மொடா அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். .
அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக வைரலான நிலையில், யூடியூபர் மீது தாக்குதல் நடத்திய நபரை கைது செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நவாப் ஹயத் ஷெரிப் என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.