சென்னையை ஒட்டியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
“உலக வலசை போகும் பறவைகள் நாள் (World Migratory Bird Day) மே 11-ஆம் நாளான நாளை கொண்டாடப்படுகிறது. இயற்கை சூழலை காப்பதில் பறவைகள் முதன்மை பங்காற்றுகின்றன. வேளாண்மைக்கு பறவைகள் உற்ற துணையாக உள்ளன.
பறவைகள் அழிந்தால் இயற்கை வளங்களும் அழியும். பறவைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 11ஆம் நாள் உலக வலசை போகும் பறவைகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
சென்னையை ஒட்டியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என இந்த நாளில் வலியுறுத்துகிறேன்.
சென்னை மாவட்டமும், ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டமும் ஏரிகளுக்கு பெயர் பெற்றவை. நீர் நிறைந்த ஏரிகளும், அவற்றையொட்டிய தாவரங்கள் நிறைந்த பகுதிகளும் அப்பகுதிகளை பறவைகள் வாழிடமாக மாற்றியுள்ளன.
இந்தச் சூழலுக்கு வலிமை சேர்க்கும் வகையில் கடலுடன் இணைந்திருக்கும் உப்பங்கழிகள், காப்புக்காடுகள் ஆகியவை கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியை பறவைகளுக்கு சொர்க்கபூமியாக மாற்றியிருக்கின்றன.
உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் (Central Asian Flyway) பள்ளிக்கரணை, முட்டுக்காடு, கோவளம், கேளம்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
வடக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ரஷியாவிலும் உள்ள பறவைகள் இந்தியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட தெற்காசிய பகுதிக்கு வலசை போகும் வழியில் மிகவும் இன்றியமையாத ஓய்விடமாக இப்பகுதி உள்ளது.
இப்பகுதியை காப்பது பறவைகளையும் சுற்றுச்சூழலையும் காப்பதற்கான ஒரு இன்றியமையாத தேவை ஆகும்.
முட்டுக்காட்டில் தொடங்கி கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி கேளம்பாக்கம் உப்பங்கழி என்றழைக்கப்படுகிறது.
கைவிடப்பட்ட உப்பளங்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் பொரி மீன்கொத்தி, சாம்பல் கூழைக்கடா, நீர்க்காகம், சாதா உள்ளான், குளக்கொக்கு, உப்புக் கொத்திகள், ஆலா உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதையொட்டிய பெரும்பாக்கம் சதுப்பு நிலம் ஆகியவை பறவைகளுக்கு பெரும் வரம் ஆகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது; ஒரு பகுதி குப்பை மேடாகி விட்டது என்றாலும் கூட அங்கு வெளிநாட்டு பறவைகள் வருவது குறையவில்லை.
பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு ஆகிய அனைத்து தீமைகளும் இருந்தாலும் கூட அவற்றை சகித்துக் கொண்டு யுரேஷியா கழுகு ஆந்தை, கோனமூக்கு உள்ளான், தட்டைவாயன் வாத்து, நாமத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, கரண்டி வாயன்,
நீலத்தாழைக் கோழி, நைட் ஹெரான், நீர்க்காகம், நாமக்கோழி, மஞ்சள் குருகு, நெடுங்கால் உள்ளான் ஆகிய பறவைகள் அதிக அளவில் வந்து இந்த சதுப்பு நிலங்களுக்கு அழகும், பெருமையும் சேர்க்கின்றன.
சிறுதாவூர் ஏரியும், அதையொட்டியுள்ள காடுகளும் உலகப் பறவைகளை ஒவ்வொரு ஆண்டும் வரவேற்று விருந்து படைக்கின்றன. தோல்குருவி, சிவப்பு சில்லை, ரோஸ்ட்ராடுல்டே, பூனைப்பருந்து, களியன், குறுங்களியன் ஆகியவை இந்தப் பகுதிக்கு அதிகம் வந்து செல்லும் பறவைகள் ஆகும்.
அதேபோல், நன்மங்கலம் காப்புக்காடு பகுதியில் யுரேஷியா கழுகு ஆந்தைகள் அதிக அளவில் முகாமிடுவது வழக்கம். கோவளம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரிய சீழ்க்கை சிரவி, வர்ணம் பூசப்பட்ட நாரை,
சாம்பல் கூழைக் கடா, நீர்க்காகம், பாம்பு பறவைகள், கருந்தலை அரிவாள் மூக்கன், பெரிய உள்ளான், காஸ்பியன் ஆலா ஆகிய வெளிநாட்டு பறவைகள் அணிவகுத்து வந்து செல்கின்றன.
இவை தவிர்த்து கிழக்குக் கடற்கரை சாலையின் அனைத்து பகுதிகளுக்கும் பிளமிங்கோ பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன.
வேடந்தாங்கல் சரணாலயத்திற்குக் கூட செல்லாத பிளமிங்கோ பறவைகள் பத்தாயிரம் கிலோமீட்டருக்கும் அதிக தொலைவை கடந்து கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிக்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கதாகும். பறவைகள் வருகைக்கு ஏற்ற இந்த சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே, கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிக்கு வரும் பறவைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, வேடந்தாங்கல் பகுதியில் நடைமுறைபடுத்தப்படும் அனைத்து விதிகளையும் இங்கும் நடைமுறைப்படுத்தி,
அங்கு மேற்கொள்ளப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா, அமைதியையும், சூழலையும் கெடுக்கும் கொண்டாட்டங்கள், ஒலிமாசுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.