சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அப்போது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் லஞ்ச மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ம் கைது செய்யப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் அவருக்கு இதய பைபாஸ் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை ஆக. 12-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆக.28ம் தேதி முதல் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.