அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது நிர்வாகி ஒருவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு `பன்னீர்’ ரோஜா மாலையை போட முயன்றபோது கோபமாக பேசிவிட்டு மாலையை அணிய மறுத்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றம் சென்ற நிலையில், புதிய தீர்மானம் எதையும் நிறைவேற்றக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக அமைந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று (ஜூன் 23) நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் துவங்கியது முதல் சற்று டென்ஷனாகவே காணப்பட்ட பழனிசாமி, பன்னீர்செல்வத்தை நேரடியாக கூட வரவேற்காமல் இருக்கையில் அமர்ந்தார். இருவரின் இருக்கைக்கு நடுவே அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்திருந்தார். பிறகு இருவரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மேடையில் பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக நிர்வாகி ஒருவர் அவருக்கு ‛பன்னீர்’ ரோஜாக்களாலான மாலையை போட முயன்றார் .ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்போது அந்த நிர்வாகியை பார்த்து, “ஏ சும்மா இருய்யா” என கடுகடுத்தபடி கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் ஒற்றைத் தலைமை குறித்து அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த பழனிசாமிக்கு மீண்டும் அதே நிர்வாகி வந்து, பன்னீர் ரோஜா மாலையை போட முயன்றார். அப்போதும் கோபத்தை வெளிப்படுத்திய பழனிசாமி, பன்னீர் ரோஜா மாலையை ஏற்க மறுத்தார்.
இதனால் அந்த நிர்வாகி மட்டுமல்லாமல் அதிமுக தொண்டர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், பதவி வருவதற்கு முன்பே பழனிசாமி இப்படி தொண்டர்களிடம் நடந்துகொள்கிறாரே’; ஒருவேளை `பன்னீர்’ என இந்த ரோஜாவின் பெயர் இருப்பதால் புறக்கணித்தாரோ எனவும் அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் முணுமுணுத்து வருவதாக கூறப்படுகிறது.