தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 1 தொகுதிக்கும் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
அதன்படி “சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து நகரங்களில் வாக்களிப்பதற்காக இலவச ரேபிடோ பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேபிடோ செயலியில் பைக் டாக்ஸி புக் செய்து VOTE NOW என்ற வாசகத்தை பயன்படுத்தினால் கட்டணம் இன்றி இலவசமாக பயணிக்கலாம்” எனவும் ஏற்கனவே அறிவித்து இருந்தது தேர்தல் ஆணையம்.
அதே போல, தேர்தலில் வாக்களிப்பதற்காக செல்லும் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் மகளிருக்கு கட்டணமில்லாமல் பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி மக்களவை பொதுத் தேர்தலில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும் வாக்காளர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி பயணச்சீட்டு இன்றி பயணம் மேற்கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் சாதாரண கட்டணம் நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றறிக்கை அரசுப் பேருந்து மண்டல துணை மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கு மேலாண் இயக்குனர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.