ஆவடி அருகே அண்ணனூர் பணிமனையில் இருந்து ரயில் நிலையம் வந்த புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில் சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில், சிக்னலை கடந்து சென்றது. இதனால் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
பணிமனையில் இருந்து புறப்பட்ட ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக, சென்னையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில், மேற்கு மண்டல ரயில்கள், வடமாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ரயிலை ஓட்டிவந்த ரவி என்பவர் மயங்கிய நிலையில் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில் இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.