ஜவகர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை அனைத்து பிரதமர்களையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சந்தித்துள்ள ராணி எலிசபெத், இந்தியாவிற்கு மூன்று முறை வருகை தந்துள்ளார்.
ராணி எலிசபெத் பதவியேற்ற பின்னர் இங்கிலாந்திற்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகாலத் தொடர்பு இருந்து வந்துள்ளது. குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகித்தவர்களையும், நேரு முதல் இந்திரா, ராஜீவ், மன்மோகன்சிங் உள்ளிட்ட பிரதமர்களையும் அவர் சந்தித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2015 முதல் 2018 வரை ராணியை சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ளார். மூன்றுமுறை இந்தியா வந்துள்ள அவர், இந்தியர்களின் உபசரிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
1961-ல் வந்தபோது மும்பை , ஜெய்ப்பூர், ஆக்ரா, கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களைப் பார்வையிட்டார். சென்னையில் பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்டோரை எலிசபெத் சந்தித்தார்.
1983-ம் ஆண்டு இந்தியா வருகை தந்த ராணி 2-ம் எலிசபெத், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தார். டெல்லியில் அன்னை தெரசாவையும் அப்போது சந்தித்தார் எலிசபெத் மகாராணி.
1997-ம் ஆண்டு 3-வது முறையாக இந்தியப் பயணம் மேற்கொண்ட எலிசபெத் மகாராணி.அப்போது தமிழ்நாட்டுக்கும் வருகை தந்தார் சென்னை தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் நடைபெற்ற கமல்ஹாசனின் பிரம்மாண்ட கனவு திரைப்படமான மருதநாயகத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றார்.
அப்போதைய முதலமைச்சர் கலைஞர், சிவாஜி, ரஜினி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2017-ல் இங்கிலாந்து- இந்தியா கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த கமல்ஹாசன் உள்ளிட்டோர் ராணியை சந்தித்தனர்.