சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு ஆண்டிற்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த விளையாட்டுத்துறை உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்..
“இந்திய ஒன்றியத்தில் மட்டுமன்றி உலக அளவிலும் விளையாட்டுத்துறையில் தவிர்க்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது.
இதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல, நம்முடைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிட்டு, ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அப்படி வெளியான அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை பற்றி ஆலோசிப்பதற்கான உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை இன்று நடத்தினோம். அரசு உயர் அதிகாரிகள் – அலுவலர்கள் – பணியாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு அறிவிப்பையும் உரிய காலத்தில் செய்து முடித்திடக் கேட்டுக்கொண்டோம்.
சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில், நம் தமிழ்நாட்டு வீரர் – வீராங்கனையர் ஆண்டிற்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்கிற வகையில் பணியாற்றுவோம் என வலியுறுத்தினோம்” என தெரிவித்துள்ளார்.