மலையாள மொழி பேசும் மக்களால் விமர்சியாக கொண்டாடப்படும் திருஓணம் திருநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஒணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமால், வாமன அவதாரம் பூண்டு, மகாபலிச் சக்ரவர்த்தியை அடக்கி, ஆண்டுதோறும் மக்களை தான் காண வேண்டும் என்கிற அவரது வேண்டுதலை ஏற்று அருள் புரிந்தார். அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலிச் சக்ரவர்த்தியை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று மலையாள மக்களால் ஓணம் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு வண்ணப் பூக்களால் அழகுற அத்தப்பூ கோலங்கள் இட்டு, புத்தாடை உடுத்தி, அறுசுவை கொண்ட ஒணம் விருந்துண்டு, புலிக்களி, கைகொட்டுக்களி போன்ற நடனங்களை ஆடி, கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தி உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.
பசி, பிணி, பகை உணர்வு முற்றிலும் நீக்கப்பட வேண்டும்; ஆணவம் அகன்று சாதி, மத வேறுபாடின்றி, சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை இந்த ஓணம் பண்டிகை உணர்த்துகிறது.
இந்த இனிய திருநாளில் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், எனது உளமார்ந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.