எம்.ஜி.ஆரை பற்றியும், வைகோ-வைப் பற்றியும் விமர்சித்த அமைச்சர் துரைமுருகனுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக ஆலோசனை கூட்டம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய, நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன்,
எத்தனை காலத்திற்கு தான் துரோகிகளை பார்த்துக்கொண்டிருப்பது? என எச்சரிக்கை விடுக்கும் வகையில் நிர்வாகிகளிடையே பேசினார்.மேலும் பேசிய அவர்,
அண்ணா காலத்தில் ஈ.வி.கே சம்பத்தை பார்த்தோம், அடுத்து எம்.ஜி.ஆரைப் பார்த்தோம், கோபால்சாமியையும்(வைகோ) பார்த்தோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. எனவே கட்டுப்பாட்டுடன் இருங்கள்” என தெரிவித்தார். அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு அதிமுக மற்றும் மதிமுக வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவதை போன்றது என்றார், எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது. கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது எம்ஜிஆர் தான். திமுக கட்சி ஒரு துரோக கும்பல் என கடுமையாக சாடினார்.