தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான நிஹாரிகா திடீர் விவாகரத்து செய்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகளான நிஹாரிகா கடந்த சில மாதங்களாகவே, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது சட்ட ரீதியாகவே கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று பிரிந்துள்ளார்.
தெலுங்கில் ‘ஒக்க மனசு’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நிஹாரிகா, அதனைத்தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படம் மூலம் பிரபலமானார்.
மேலும், கடந்த 2016 முதல் 2019 வரை ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ள நிஹாரிகா, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 2020ல் டிசம்பர் மாதம் சைதன்யாவுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா, சைதன்யாவின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு பிரபல நடிகர்களான சிரஞ்சீவி, ராம் சரண், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே நிஹாரிகாவுக்கும் அவரது கணவர் சைதன்யாவுக்கும் இடையே சிறு சிறு பிரச்சினைகள் இருந்து வந்ததாகவும், அதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து நடிகை நிஹாரிகா தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இருவருமே சட்ட ரீதியாக பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், நிஹாரிகா தனது இன்ஸ்டாவில் இருந்த திருமண புகைப்படங்களை டெலிட் செய்து விட்டார்.
மேலும், இந்த விவாகரத்து முடிவு குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நானும் சைதன்யாவும் பிரிய முடிவெடுத்துள்ளோம். பிரிவையும், புதிய வாழ்வையும் ஏற்க எங்களுக்கு தேவையான ப்ரைவசியை கொடுக்க வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
நடிகை நிஹாரிகா, சைதன்யா விவாகரத்து தெலுங்குத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.