கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தந்தையே தனது 6 வயது மகளை கோடாலியால் (axe) வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள புன்னமூடு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். அவரது மனைவி வித்யா. இந்த தம்பதிக்கு 6 வயதில் நக்ஷத்ரா என்ற மகள் உள்ளார்.
இதனிடையே, மகேஷின் மனைவி வித்யா துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில், 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேஷின் தந்தை ஸ்ரீமுகுந்தனும் ரயில் மோதி உயிரிழந்தார்.
அப்போது, தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்த மகேஷ் அதன் பிறகு மீண்டும் துபாய் செல்லவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு தனது மகள் நக்ஷத்ராவுடன் மகேஷ் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவரது தாய் சுனந்தா அருகில் உள்ள மகளின் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நேரத்தில் வீட்டில் இருந்து திடீரென நக்ஷத்ராவின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து உடனே பதற்றம் அடைந்த சுனந்தா விரைந்து சென்று பார்த்துள்ளார். அங்கு, கழுத்து வெட்டுப்பட்ட நிலையில் சிறுமி நக்ஷத்ரா சோபாவில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததுள்ளார்.
மேலும், சிறுமியின் அருகே கையில் கோடாலியுடன் (axe) ஆவேசமாக நின்று கொண்டு இருந்த மகேஷ் திடீரென சுனந்தாவையும் கோடாலியால் வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து மாவேலிக்கரை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நக்ஷத்ராவையும், சுனந்தாவையும் மாவேலிக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், நக்ஷத்ரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், சுனந்தாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மகேஷை கைது செய்துள்ளனர். மனைவி மற்றும் தந்தையின் மரணத்தால் மகேஷுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாகவும், கொலைக்கு காரணம் இதுவாகத்தான் இருந்திருக்கும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.